கை.களத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்-வார்டு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கை.களத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்-வார்டு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-17 18:30 GMT

தர்ணா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், கை.களத்தூர் கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வக்குமார் தலைமையில், 3, 5, 6, 8, 9, 11 ஆகிய வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கை.களத்தூர் கிராம ஊராட்சியில் வேலை ஏதும் நடைபெறாமல் பணம் எடுக்கப்படுகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததற்கு துணைத்தலைவர் காசோலையில் கையொப்பமிடும் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

ராஜினாமா

இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுமுக பேச்சுவார்த்தையில் துணைத்தலைவரை தனி அறையில் அமர வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கிய 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கை.களத்தூர் கிராம ஊராட்சி நிர்வாகத்தை இனி வட்டார வளர்ச்சி அலுவலரே நிர்வகிக்க வேண்டும். இல்லையென்றால் இது தொடர்பாக துணைத்தலைவர் மற்றும் 7 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு நீதிமன்றத்தை நாடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து கலெக்டரை சந்திக்க சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்