"எந்தெந்த வழக்குகளுக்கு குண்டர் சட்ட நடவடிக்கை என்ற வரையறை அவசியம்"- அரசுக்கு வழிகாட்டுவோம் என நீதிபதிகள் கருத்து

எந்தெந்த வழக்குகளில் குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான வரையறை அவசியம் என்றும், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு வழிகாட்டுதல்களை ஏற்படுத்துவோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Update: 2023-07-20 21:11 GMT


எந்தெந்த வழக்குகளில் குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான வரையறை அவசியம் என்றும், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு வழிகாட்டுதல்களை ஏற்படுத்துவோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

குண்டர் சட்டம்

கடந்த ஆண்டு மதுரையில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சில கல்லூரி வாசல்களில் மாணவிகளிடம் தொந்தரவு செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இவர்களில் சிலர் கல்லூரி மாணவர்கள் என்றும் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் அவர்களின் உறவினர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.

வாலிபர்களின் எதிர்காலம்

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அழகுமணி, மனுதாரர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

அதற்கு கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் திருவடிக்குமார் ஆஜராகி, கல்லூரி முன்பு மாணவிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்தான் மனுதாரர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

வரையறை அவசியம்

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் மீது ஒரே ஒரு வழக்குத்தான் இருப்பது தெரியவருகிறது. ஆர்வக்கோளாறால் செய்த தவறுக்காக குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது தேவையற்றது.

குண்டர் தடுப்புச்சட்ட நடவடிக்கைைய எந்தெந்த வழக்குகளில் எடுக்க வேண்டும்? என்பது தொடர்பான வரையறை ஏற்படுத்துவது அவசியம். எனவே அது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்குவோம் என்று அறிவுறுத்தி, இந்த வழக்கை ஒத்தி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்