ஆவடி அருகே விமானப்படை ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

ஆவடி அருகே ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.;

Update:2023-10-18 13:24 IST

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பாலவேடு மெயின் ரோடு தேங்காய் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 71). இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி சசிகலா. ராமமூர்த்தி தற்போது சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் தினமும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்ததால் சென்னை போரூரில் உள்ள தனது மகள் சீமா என்பவர் வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையே, நேற்று காலை இவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் ராமமூர்த்திக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து ராமமூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராமமூர்த்தி முத்தாபுதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமாராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்