விறு விறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு

சிவகாசி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 250 வீரர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-05-21 20:18 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 250 வீரர்கள் கலந்து கொண்டனர். 

ஜல்லிக்கட்டு

சிவகாசி ஒன்றியத்தில் உள்ள நடுவப்பட்டி ஸ்ரீ சப்பானி முத்தையா கோவில் அருகில் நேற்று காலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி விறு விறுப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 1,200 மாடுகளின் உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.

அதேபோல் 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர். காலை 6 மணிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் நடுவப்பட்டிக்கு வர தொடங்கியது. வாகனங்களில் அழைத்து வரப்பட்ட மாடுகளுக்கு மருத்துவர்கள் சோதனை செய்தனர். அதே போல் மாடுபிடி வீரர்களையும் மருத்துவர்கள் சோதனை செய்தனர். அதன் பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

தங்க நாணயம்

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், மேயர் சங்கீதா இன்பம், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மாடுகள் வரிசையாக களத்தில் ஓடியது. அதனை மாடுபிடி வீரர்கள் அடங்கினர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கநாணயம், வெள்ளி நாணயம், கட்டில், அண்டா, மின்விசிறி என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 400 மேற்பட்ட மாடுகள் களத்தில் இறங்கி வீரர்களுக்கு ஆட்டம் காட்டியது. மாடுபிடி வீரர்கள் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கி பரிசுகளை தட்டி சென்றனர்.

கவுரவிப்பு

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை வழங்கிய சிறப்பு விருந்தினர்களை விழாக்குழுவினர் மேடையில் கவுரவித்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு விருந்தினர்கள் நடுவப்பட்டி வந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

2 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை பார்க்க வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன், சோமசுந்தரம், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனசெயன், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்