கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2023-05-10 19:00 GMT

காரியாபட்டி, 

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள வீரசூரையா, தருணவிநாயகர், அரியநாச்சியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

இதில் கலந்துகொள்ள ஆன்லைன் வழியாக 600 மாடுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்து இருந்தனர். இந்த போட்டியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், வெள்ளி நாணயம், கட்டில், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

திருச்சுழி துணை சூப்பிரண்டு ஜெகநாதன், அருப்புக்கோட்டை உதவி சூப்பிரண்டு காரட் கரூண் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்