கறம்பக்குடி அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்

கறம்பக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் வீரத்துடன் அடக்கினர். மாடுகள் முட்டி 56 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-02 18:36 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் முத்துமாரியம்மன் மற்றும் காப்பு முனி கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று காப்பு முனி திடலில் நடைபெற்றது. முதலில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகள்

வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடு பிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை மாவட்டத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. மாலை 3 மணி வரை 523 காளைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில் வரிசையில் நின்ற காளைளை சிலர் முன்னோக்கி கொண்டு சென்று அவிழ்த்து விட முயன்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து காளைகளை கொண்டு வந்திருந்த உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

56 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் 3 குழுக்களாக களம் கண்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, கட்டில், பீரோ, சேர், பாத்திரங்கள், சைக்கிள், மிக்சி, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 56 பேர் காயமடைந்தனர். இதில் லேசான காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்