ஆலங்குடி, பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டு; போலீஸ் ஏட்டு உள்பட 25 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, பொன்னமராவதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ் ஏட்டு உள்பட 25 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-07 18:53 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து கோவில் அருகே உள்ள குமரகுளத்து வாடிவாசலில் நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க வீரர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

இதனைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 565 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில். 106 மாடுபிடி வீரர்கள் 5 சுற்றுகளாக கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்க முயன்றனர். இதில், காளைகள் முட்டியதில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் ஏட்டு முருகானந்தம் உள்பட 16 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு 3 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பரிசுகள்...

இதையடுத்து காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், குத்து விளக்கு, மின்விசிறி, எவர் சில்வர் பாத்திரங்கள், கட்டில், பீரோ, மிக்சி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக்ரஜினி தலைமையில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி

இதேபோல் பொன்னமராவதி ஒன்றியம் அம்மன்குறிச்சி ஊராட்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 639 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை 193 மாடு பிடி வீரர்கள் களமிறங்கி காளையை அடக்க முயன்றனர்.

இதில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், குக்கர், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 9 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர். ஆலங்குடி, பொன்னமராவதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ் ஏட்டு உள்பட 25 பேர் காயம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்