ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்

ஆதனக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் வீரத்துடன் அடக்கினர். மாடுகள் முட்டி 42 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-07 18:52 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் உள்ள மோட்டு முனீஸ்வரர், இச்சடி முனீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கினார். ஜல்லிக்கட்டை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.

வீரர்களை பந்தாடிய காளைகள்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். முன்னதாக ஜல்லிக்கட்டு காளை ஒன்று நாயுடன் களம் இறங்கியது. அப்போது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணியளவில் நிறைவடைந்தது. இதனால் 60-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்க்காமல் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த மாட்டின் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

42 பேர் காயம்

இதையடுத்து, காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் அண்டா, சில்வர் குடம், பிளாஸ்டிக் டேபிள், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 42 பேர் காயமடைந்தனர். இதில் லேசான காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

படுகாயமடைந்த 14 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெருங்களூர் அருகே உள்ள கூத்தாச்சிப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்ற மாடுபிடி வீரருக்கு மாடு முட்டியதில் வலது கண்ணில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

2 காளைகள் நேருக்கு நேர் மோதல்; போட்டி நிறுத்தம்

கந்தர்வகோட்டை அருகே உள்ள நத்தமாடிபட்டி கிராமத்தை சேர்ந்த பிரவீன்ராஜ் என்பவரது காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து செல்லும் போது முன்பு அவிழ்த்து விட்ட காளை திரும்பி வந்ததில் 2 காளைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பிரவீன்ராஜ் காளை தலையில் அடிபட்டு அதே இடத்தில் படுத்துக்கொண்டது. இதனால் ஜல்லிக்கட்டு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் நடமாடும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த காளைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் காளையின் உரிமையாளர் தனியார் வாகனம் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு காளையை பரிசோதித்த டாக்டர்கள் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் நெல்லுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது சின்னவர் என்ற காளை வாடிவாசலுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அருகாமையில் இருந்த 45 அடி ஆழமுள்ள தண்ணீர் நிறைந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையிலான வீரர்கள் அப்பகுதி மக்கள் உதவியுடன் ஜல்லிக்கட்டு காளையை கயிறு மூலம் கிணற்றில் இருந்து மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்