மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள் மாடுகள் முட்டியதில் 65 பேர் காயம்

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறி பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டியதில் 65 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-10 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறி பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டியதில் 65 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

திருப்பத்தூர் அருகே நெடுமறம்புதூரில் உள்ள வெள்ளாலக்கருப்பர் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாடுகளை வைத்து வழிபாடு நடைபெற்றது.

முக்கிய வீதிகள் வழியாக நாட்டார்கள் ஊர்வலமாக வந்து தொழுவினை அடைந்தனர். தொழுவில் வருவாய் கோட்டாட்சியர் பால்துரை மற்றும் தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் செல்லமுத்து ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் காளைகள் பரிசோதனைக்குப் பின் ஒன்றன் பின் ஒன்றாக தொழுவில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. மாடுபிடி வீரர்கள் 53 பேர் களத்தில் இருந்தனர். சில மாடுகள் பிடிபட்டும் பல மாடுகள் பிடி படாமலும் சென்றன.

சீறி பாய்ந்து சென்ற காளைகள்

தொழுவிலிருந்து 203 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. அவை சீறி பாய்ந்து சென்றன. மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக திருச்சி, தஞ்சை, பொன்னமராவதி, அறந்தாங்கி, காரைக்குடி, மாங்குடி, நெடுமரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து 900-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 65 பேர் காயமடைந்தனர். கீழச்சிவல்பட்டி, திருக்கோஷ்டியூர், துணை சுகாதார நிலையம் சார்பில் டாக்டர்கள், நர்சுகள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

காயம் அடைந்தவர்களில் திருப்பத்தூர் கதிர்வேல் (22) ஆத்தங்கரைப்பட்டி சின்னையா (50) எம்.கோவில்பட்டி கார்த்திகேயன் (33) சாலூர் மின்னன் (18) ஆத்தங்கரைப்பட்டி தவமணி (27) பொன்னாங்குடி கார்த்திக் (23) ஆகிய 6 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கும், கிழவளவைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (60) என்பவர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் அறிவுறுத்தலின்படி திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்