பெண் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை
பெண் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை மாநகர் கரிமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட புது ஜெயில் ரோடு பகுதியில் போலீசார் கடந்த 2013-ம் ஆண்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவையும் சோதனை செய்தனர். அப்போது அதில் 25 கிலோ கஞ்சா இருந்தது. பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக அந்த கஞ்சாவை கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த சிவனம்மாள் (வயது 40), ஆண்டிச்சாமி, பாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் தங்கேஸ்வரன் ஆஜானார்.
வழக்கு நிலுவையில் இருந்தபோது, ஆண்டிச்சாமி இறந்துவிட்டார். எனவே மற்ற 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார்.