விபத்தை ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தை ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
காரைக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவர் அப்பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். காரைக்குடி ஸ்ரீராம் நகரில் உள்ள தனது அண்ணன் ராஜ் வீட்டிற்கு தனது மனைவி மற்றும் குழந்தையோடு தாஸ் வந்திருந்தார். அங்கிருந்து, அண்ணனின் மோட்டார் சைக்கிளில் தாஸ், அவரது மனைவி சவேரியம்மாள், 6 மாத கைக்குழந்தை ஜோஸ்னா ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார்.
பாரிநகர் அருகே சென்றபோது எதிரே வடகுடியை சேர்ந்த செல்வம் (வயது 50), மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வேகமாக வந்து தாஸ் குடும்பத்தினர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்். இதில் தாஸ், சவேரியம்மாள், அவர்களது குழந்தை ஜோஸ்னா ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அதில் குழுந்தை ஜோஸ்னா, மதுரைஅரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு காரைக்குடி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா, குற்றம் சாட்டப்பட்ட செல்வத்திற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.