ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

கடலூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-05 19:28 GMT

உண்ணாவிரதம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், ஜெகநாதன், அம்பேத்கர், குணசேகரன், மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளருமான தாஸ் கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

அப்போது அவர் கூறுகையில், இந்த அரசு ஆட்சிக்கு வர ஜாக்டோ-ஜியோ அமைப்பு முதுகெலும்பாக இருந்தது. ஆனால் எங்களின் கோரிக்கையை இது வரை இந்த அரசு நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத்தை மீண்டும் தருவோம் என்ற அறிவிப்பை நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு தரவில்லை. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வில்லை. இந்த போராட்டத்திற்கு பிறகாவது எங்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.

போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் கிறிஸ்டோபர், மாவட்ட தலைவர் குமரவேல், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் ரமேஷ், அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சேதுராமன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கலைச்செல்வி, அரசு பணியாளர் சங்கம் நல்லதம்பி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் புருஷோத்தமன், நுண்கதிர் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் சுந்தரராஜா உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிதி காப்பாளர் சிற்றரசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்