இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.;
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வான்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. அனைத்து இந்திய மக்களும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மழை பாதிப்பு வந்தால் அதற்குரிய நிவாரணங்களை தமிழக அரசு உரிய முறையில் வழங்க வேண்டும்.
இரு நாடுகளுக்குள் உள்ள பகையை தீர்த்துக் கொள்வதற்கு போர் என்ற நிலை மாற வேண்டும். இஸ்ரேல் விவகாரத்தில் இரு நாடுகளும் பேசுவதற்கு ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், இந்திய பிரதமர் உலக நாடுகளிடம் நன்மதிப்பை பெற்று இருக்கிறார். அவர் முயற்சி எடுத்து இருநாடுகளுக்கும் சமரச ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவர தனக்குரிய செல்வாக்கினை பிரதமர் மோடி பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.