பரோல் முடிந்து ஜெயிலுக்கு வந்தவரிடம் ரூ.3 ஆயிரம் வசூல்:சேலம் சிறை ஊழியர்கள் 2 பேரிடம் விசாரணை

பரோல் முடிந்து ஜெயிலுக்கு வந்தவரிடம் ரூ.3 ஆயிரம் வசூலித்ததாக சேலம் சிறை ஊழியர்கள் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2023-10-03 19:12 GMT

ஆயுள் தண்டனை கைதி

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது40). ஆயுள் தண்டனை கைதியான இவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி 3 நாள் பரோலில் சென்றார். பரோல் முடிந்து சேலம் வந்த அவரை வார்டர் ராமகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக புகார் எழுந்தது.

அதன் பிறகு கைதி ஹரிகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். புகாரின் பேரில் வார்டர் ராமகிருஷ்ணன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனவேதனை அடைந்த ராமகிருஷ்ணன், கைதி ஹரிகிருஷ்ணனை கண்டுபிடித்து கொடுத்தால் தனக்கு மீண்டும் வேலை கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து கைதி குறித்து விசாரித்த வண்ணம் இருந்து உள்ளார்.

ரூ.3 ஆயிரம் வசூல்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்வதாக இவருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அவர் சென்னை பீர்க்கன்கரனை போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார். சென்னை பெருங்களத்தூரில் இருந்த ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக அவரிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரோல் முடிந்து சிறைக்கு வருவதற்காக சேலம் வந்து உள்ளார். பின்னர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பழம் வாங்க சென்றபோது சிறையில் உள்ள தண்டனை குறைப்பு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 2 பேர் அவரிடம் தலா ரூ.3 ஆயிரம் பணம் வாங்கி உள்ளனர்.

2 பேரிடம் விசாரணை

பரோலில் செல்ல வேண்டும் என்றாலும், பரோல் முடிந்து சிறைக்கு வந்தாலும் சம்பந்தப்பட்ட சிறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய உள்ளது. இதனால் தலைமறைவாகி விட்டேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து கைதி ஹரிகிருஷ்ணனிடம் பணம் வாங்கியதாக கூறப்படும் 2 ஊழியர்களிடம் சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உண்மை என்று தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்