மதுபோதையில் தந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மகன்... திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்
திருவாரூர் அருகே, மதுபோதையில் இருந்த மகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததால், படுகாயமடைந்த தந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.;
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மணிகண்டன். மகனுக்கு திருமணமாகாத நிலையில் தந்தையும் மகனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மதுபோதைக்கு அடிமையான மணிகண்டன், குடித்துவிட்டு வந்து தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி, மதுபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன், தந்தையை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த மணிகண்டன், மண்ணெண்ணெயை எடுத்து, நாராயணன் மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில் 60 சதவீத தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் 13 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.