தர்மபுரி நகரில் ரூ.6.56 கோடியில் திட்டப்பணிகள் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் ஆய்வு

தர்மபுரி நகரில் நடைபெற்று வரும் ரூ.6.56 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சுல்தானா நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-15 16:44 GMT

தர்மபுரி நகரில் நடைபெற்று வரும் ரூ.6.56 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சுல்தானா நேரில் ஆய்வு செய்தார்.

திட்டப்பணிகள்

தர்மபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.56 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சந்தைப்பேட்டை வளாகத்தில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மைய கட்டிடம், சாலை பணிகள் நடைபெறுகிறது. இதேபோல் சந்தைப்பேட்டை நகர்ப்புற சுகாதார மைய கட்டிடத்தின் முதல் தளத்தில் கூடுதல் கட்டிடம் மற்றும் அன்னசாகரத்தில் நகர் நல மையம் கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது.

இதேபோன்று அரசு மருத்துவமனை அருகில் உள்ள எரிவாயு தகன மேடையில் மேம்பாட்டு பணி, தர்மபுரி-பென்னாகரம் ரோடு ஏ.எஸ்.டி.சி. நகரில் நகராட்சி பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. இதேபோல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மதிகோன்பாளையம், குமாரசாமிப்பேட்டை, பாரதிபுரம் ஆகிய 3 இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் எஸ்.வி. ரோட்டில் உள்ள குன்செட்டிகுளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

இந்த பணிகளை சேலம் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சுல்தானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், தர்மபுரி நகராட்சி பொறியாளர் ஜெயசீலன் ஆகியோர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கி கூறினர். தொடர்ந்து பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் நகராட்சியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் தவமணி, நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதையன், அலுவலக மேலாளர் விஜயா, துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமனசரண், சீனிவாசலு மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்