தமிழகத்தில் சாராய ஆறு ஓடுகிறது:ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சாராயம் விற்றதே அப்பாவி மக்கள் இறப்புக்கு காரணம்தி.மு.க. மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் சாராய ஆறு ஓடுகிறது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சாரயம் விற்றதே அப்பாவி மக்கள் இறப்புக்கு காரணம் என்று தி.மு.க.மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2023-05-16 18:45 GMT


விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

நடவடிக்கை எடுக்கவில்லை

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர்.

அதுபோல், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை கிராமத்தில் போலி மதுபானம் அருந்தி 5 பேர் இறந்துள்ளனர். இது துயரமான, வேதனையான செயலாக பார்க்க முடிகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, இந்த 2 ஆண்டுகளில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்கின்றவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு காரணம் தி.மு.க.வை சேர்ந்தவர்களே கள்ளச்சாராய விற்பனையிலும், போலி மதுபான விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ள ஒருவர், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்தன.

இதையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய காரணத்தால் இன்றைக்கு மரக்காணத்தில் மட்டும் 14 பேரின் உயிரை இழந்துள்ளோம்.

2 நாளில் 1600 பேர் கைது எப்படி?

அதுபோல், செங்கல்பட்டு பெருங்கரணையில் 5 பேர் இறந்துள்ளனர். இதில் போலி மதுபானம் விற்பனை செய்தவர், அந்தப் பகுதியை சேர்ந்த சித்தாமூர் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் நாகப்பனின் சகோதரர் அமாவாசை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தியும், போலி மதுபான விற்பனை செய்துள்ளதால், அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தோம். ஆனால், இந்த 2 ஆண்டுகளில் கள்ளச்சாராய வியாபாரிகள், போலி மதுபான வியாபாரிகள் பெருகி இருக்கிறார்கள்.

இந்த 2 நாளில் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,600 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அப்படி என்றால் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதும், போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் அரசுக்கும், காவல்துறைக்கும் தெரிந்திருக்கிறது.

சாராய ஆறுதான் ஓடுகிறது

சட்டமன்றத்தில் நான் குறிப்பிட்டு பேசும்போது, இன்றைக்கு பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பேசினேன். முதல்-அமைச்சர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 19 பேரை இழந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று கூறினார்கள். ஆனால் இப்போது சாராய ஆறுதான் தமிழகத்திலே ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு பழமொழி சொல்வார்கள், கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு, அதுபோல் இன்றைக்கு கள்ளச்சாராயம், போலி மதுபானம் குடித்தவர்கள் கண்ணையும் இழந்து விட்டார்கள், உயிரையும் இழந்து விட்டார்கள். இதற்கு நாட்டை ஆள்பவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

போலி மதுபான விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை இந்த அரசாங்கமே ஊக்குவிக்கிறது.

எல்லாவற்றிலும் ஊழல்

தமிழகத்தில் எல்லாவற்றிலும் ஊழல். அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒரு மதுபாட்டிலுக்கு 10 சதவீத கமிஷன் வாங்குவதாக பத்திரிக்கை செய்திகளில் வந்துள்ளது. அவரிடம் கேட்டால் நான் மேலிடம் வரை பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்கிறார். மது விற்பனையிலும் ஊழல் செய்துள்ளனர்.

இப்படி ஊழல் செய்த காரணத்தால் வந்த ரூ.30 ஆயிரம் கோடியை என்ன செய்வதென்று தெரியவில்லை என அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். அவரே இந்த செய்தியை ஆடியோ மூலம் தெரிவித்திருக்கிறார். அப்படி என்றால் இப்படிப்பட்ட செயல் மூலமாக இந்த 2 ஆண்டில், எவ்வளவு பணத்தை திரட்டி இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்