முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்1,000 அரசு பள்ளிகளுக்கு விரிவாக்கம்கலெக்டர் சாந்தி தகவல்

Update: 2023-07-15 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

கொள்முதல் குழுக்கூட்டம்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக சமையல் பாத்திரங்கள் கொள்முதல் செய்வதற்கான தர்மபுரி மாவட்ட அளவிலான கொள்முதல் குழுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் காலை உணவு திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ள சமையல் பாத்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாலக்கோடு வட்டாரத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 111 அரசு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் உள்ள 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

சமையல் பாத்திரங்கள்

இந்த திட்டத்தில் காலை உணவு சமைக்கும் பணி சுய உதவிக்குழுக்களின் மூலம் செய்யப்பட உள்ளது. இதனை நிர்வகிக்கும் பொறுப்பு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மேற்கொள்ளும். இந்த பள்ளிகளுக்கு சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கு குழுவினர் சோதனை நடத்தினர். தேர்வு செய்யப்படும் நிறுவனங்களிடமிருந்து உரிய கொள்முதல் நடைமுறையை பின்பற்றி கூட்டமைப்பு மூலம் தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த துறை அலுவலர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்