மாநகராட்சி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா

மாநகராட்சி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா

Update: 2022-08-15 17:10 GMT


கோவை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மாநகராட்சி

கோவை மாவட்டத்தில் நேற்று 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாநகராட்சியில் நடந்த விழாவில் மேயர் கல்பனா கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் ஷர்மிளா, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாரதியார் பல்கலைக்கழம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் துணை வேந்தர் காளிராஜ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைந்த இந்தியா என்ற கனவை நினைவாக்கிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு தலைவணங்குவோம் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் துணை வேந்தர் கீதாலட்சுமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டின் கீர்த்திசக்ரா விருது பெற்ற கென்னடியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். தேசிய மாணவர் படையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து அங்கு உள்ள தாவரவியல் பூங்காவில் சுதந்திர வனம், 20 வகை ரோஜா தோட்டத்தை பனை விதைகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்.

விமான நிலையம்

கோவை விமானநிலையத்தில் நடந்த விழாவுக்கு விமானநிலைய இயக்குனர் செந்தில் வளவன் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் விமானநிலைய ஊழியர்கள், மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோவை அரசு கலைக்கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் (பொறுப்பு) சுமதி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சுதந்திர தின விழாவில் சூலூர் விமானப்படை தள கமாண்டிங் அதிகாரி ராகுல் குப்தா தேசியக்கொடியை ஏற்றினார். பள்ளி முதல்வர் மேகநாதன் வரவேற்றார். விமானப்படை பெண்கள் நலச்சங்க தலைவி உத்தரா அஸ்தானா பங்கேற்று சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

மருதமலை கோவில்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் தேசியக்கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. வடவள்ளி உழவர் சந்தையில் விவசாயிகள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர். வடவள்ளி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நேவி குழந்தைகள் பள்ளியில் சவுரிய சக்ரா விருது பெற்ற கொச்சி கடற்படை கமடோர் வருண் சிங் தேசியக்கொடியேற்றினார்.

சின்னவேடம்பட்டி மாநகராட்சி பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் பள்ளி, குனியமுத்தூர் அரசு பள்ளி, அன்னூர் கெம்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளி, மாவட்ட மைய நூலகம், அறிஞர் அண்ணா பூங்கா நடைபாதை நல சங்கம், டேக்ட் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்