மேட்டூர் அணைக்கு நீர்வரத்து47 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 47 ஆயிரத்து 436 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2022-05-20 20:02 GMT

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 47 ஆயிரத்து 436 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்வதால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமானது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதன்படி நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 29 ஆயிரத்து 72 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 29 ஆயிரத்து 964 கன அடியாக அதிகரித்தது. பின்னர் மாலையில் மேலும் அதிகரித்து வினாடிக்கு 47 ஆயிரத்து 436 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

114 அடியாக உயர்ந்தது

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 47 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று காலை 112.77 அடியாக (மொத்தம் 120 அடி) இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 114 அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணையின் 16 கண் மதகு பகுதி தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

இதனிடையே நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்