தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு -வனத்துறை தகவல்

தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள், கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெற்றது.

Update: 2024-01-26 00:21 GMT

சென்னை,

தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை பாதுகாப்பதற்காக தமிழக அரசு, தலைமை வனஉயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தலைமையில் மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள், கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெற்றது.

முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பம், கேரளாவின் வயநாடு, பந்திப்பூர் புலிகள் காப்பகம், கர்நாடகாவின் நாகர்ஹோல் புலிகள் காப்பகம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், மொத்த கழுகுகளின் எண்ணிக்கை 246 என மதிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாடு வனத்துறையின் 2-வது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் 30, 31-ந்தேதிகளில் நடைபெற்றது. பில்லிகிரி ரங்கநாத சாமிகோவில் புலிகள் காப்பகம், கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு பணியில், 'வாண்டேஜ் பாயின்ட்' (வாய்ப்பு புள்ளிகள்) எண்ணிக்கை முறை பின்பற்றப்பட்டது. இதன்மூலம், கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 320 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பு குழு முடிவில் அடிப்படையில் வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகள், ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள், தலைமை வனஉயிரினக்காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் அருண் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்