காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு

தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2023-05-19 19:15 GMT

தடாகம்

தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வனவிலங்குகள்

கோவை கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது மலையோர கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அவற்றை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தடாகம் பள்ளத்தாக்கு

இந்த நிலையில் கோவையை அடுத்த தடாகம் பள்ளத்தாக்கு வனப்பகுதியில் தற்போது கூட்டங்கூட்டமாக காட்டெருமைகள் சுற்றி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், மலையடிவார பகுதி, வனப்பகுதி தற்போது பச்சை பசேலனெ காட்சியளிக்கிறது. இதனால் காட்டெருமைகளுக்கு புற்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்கள் அதிகளவில் கிடைத்து வருகிறது.

இதன் காரணமாக அவை கூட்டங்கூட்டமாக சுற்றி வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய இடங்களிலும், வனப்பகுதியிலும் காட்ெடருமைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் காட்டெருமைகளை பார்த்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

குழிகளை மூட வேண்டும்

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

தடாகம் பள்ளத்தாக்கு ஒரு சிறந்த வனப்பகுதியாக இருக்கிறது. இடம் பெயர்ந்து செல்லும் வனவிலங்களுக்கு இது ஒரு சந்திப்பு பகுதியாக இருப்பதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் இருப்பது வழக்கம். தற்போது காட்டெருமைகள் கூட்டங்கூட்டமாக சுற்றுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிலர் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்கிறார்கள். அவ்வாறு செல்வதை தடுக்க வேண்டும். அதுபோன்று தடாகம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் அதிக ஆழம் கொண்ட குழிகள் அதிகளவில் உள்ளது. இதனால் பல வனவிலங்குகள் அதற்குள் தவறி விழுந்து உயிரிழந்து வருகிறது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் இருக்கும் குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்