அரசு ஒப்பந்ததாரரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் 3 நாளாக நடைபெற்ற சோதனை நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2022-10-14 19:20 GMT

3-வது நாளாக சோதனை

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை. அரசு ஒப்பந்ததாரரான இவர் நெடுஞ்சாலை துறையில் சாலைகளில் ஊர் பெயர் பலகை வைத்தல், பிரதி ஒலிப்பான் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரது வீடு மற்றும் பிரதான அலுவலகம் பெரியார் நகர் டபுள் ரோட்டில் உள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்த பணி எடுத்து செய்ததில் வரி ஏய்ப்பு உள்பட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதுக்கோட்டையில் உள்ள பாண்டிதுரையின் அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 12-ந் தேதி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது நேற்று 3-வது நாளாக நீடித்தது.

ஆவணங்கள் சிக்கியது

இந்த நிலையில் அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நேரடி விசாரணை நடத்தினர். இதில் பெரியார் நகர் டபுள் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், பணம், நகைகள், கணினி உபகரணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று இரவு நிறைவடைந்தது. பெரியார் நகர் டபுள் ரோட்டில் உள்ள பாண்டிதுரை அலுவலகத்திற்குள் வருமானவரித்துறை அதிகாரிகள் காரில் வந்து சென்றபடி இருந்தனர். மேலும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். சோதனையின் போது ஆவணங்களை கொண்டு செல்வதற்காக அட்டை பெட்டிகள் ஏராளமாக காரில் எடுத்து செல்லப்பட்டன. பின்னர் அந்த ஆவணங்களை வேனில் கொண்டு செல்லப்பட்டன.

வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையால் பாண்டிதுரை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்