மாவட்டத்தில்சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-01-20 18:45 GMT

பொதுக்கணக்கு குழு

தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் தேனி மாவட்டத்துக்கு நேற்று ஆய்வு செய்ய வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆய்வு பயணத்தை தொடங்கினர்.

முதலில் தேனி அரசு கள்ளர் மாணவர் விடுதியில் ஆய்வு செய்தனர். அங்கு பணியாளர் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மாணவர்கள் எண்ணிக்கை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, மாணவர்கள் தங்கும் அறை, உணவின் தரம், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அங்கிருந்து முத்தனம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பழைய அரசு மருத்துவமனை

பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் முதியோர் நல்வாழ்வு பிரிவு, முதியோர்களுக்கான பிசியோதெரபி பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் முதியோர்கள் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை, படுக்கை வசதி, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதையடுத்து பெரியகுளம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தாய் செடி நடவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள், மண்புழு கூடம் போன்றவற்றை பார்வையிட்டனர். பின்னர், தேனி சமதர்மபுரத்தில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை இந்த குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு மீண்டும் சிகிச்சை பிரிவு தொடங்குவது தொடர்பாக அவர்கள் கலந்தாலோசனை செய்தனர்.

ஆய்வுக்கூட்டம்

இந்த ஆய்வைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்களில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில் துறை வாரியாக நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அதற்கான நிதி செலவினம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.

இந்த ஆய்வில், குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ராஜா (சங்கரன்கோவில்) மற்றும் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், சட்டப்பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, அரசு மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளாதேவி, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்