இரும்பு கதவு சரிந்து விழுந்து மாணவன் இறந்த வழக்கில் தனியார் விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
இரும்பு கதவு சரிந்து விழுந்து பள்ளி மாணவன் இறந்த வழக்கில் தனியார் விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
சென்னை, அயனாவரம், ஹவுசிங் போர்டு, பெரியார் சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு துர்கா (32) என்ற மனைவியும், ஜீவா (வயது 13), நித்தீஷ் (வயது 10) என்கிற 2 மகன்கள் இருந்தனர். நித்தீஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு வடித்து வந்தார். கடந்த 7-ந் தேதியன்று ரமேஷ் தனது மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் என 30 பேருடன் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவிலின் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். சாமி தரிசனம் செய்து விட்டு விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது சிறுவன் நித்தீஸ் விடுதியின் சுற்றுச்சுவர் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த இரும்பு கதவு திடீரென சிறுவன் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நித்தீஷ் உயிரிழந்தான். இதுகுறித்து ரமேஷ் தனியார் விடுதியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நித்தீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இந்த வழக்கில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறுவன் சாவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அந்த தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இது சம்பந்தமாக உரிய விசாரணை எடுப்பதாக தெரிவித்தனர்.
இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிறுவனின் சாவிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.