தஞ்சையில், போலீசாரிடம் இருந்து கைதி தப்பியோட்டம்

தஞ்சையில், போலீசாரிடம் இருந்து கைதி தப்பியோட்டம்

Update: 2022-07-28 20:06 GMT

தஞ்சையில், சிறையில் அடைக்க அழைத்துச்சென்றபோது போலீசாரிடமிருந்து கைதி தப்பியோடினார். முட்புதரில் பதுங்கி இருந்த அவரை செல்போன் சிக்னலை வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

வாலிபர் கைது

தஞ்சையை அடுத்த பனங்காடு கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் செல்லான். இவருடைய மகன் கணேசன்(வயது 24). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை தாலுகா போலீசார் ஒரு வழக்கில் இவரை கைது செய்தனர்.

முன்னதாக போலீசார் கைது செய்வதற்காக சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக ஓடியபோது கீழே விழுந்ததில் கணேசன் காயமடைந்தார். இதையடுத்து அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தப்பி ஓட்டம்

இந்த நிலையில் அவர் குணமடைந்ததையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து போலீசார் கணேசனை அழைத்துக்கொண்டு தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் அங்கு இருந்து திருச்சி செல்வதற்காக நின்று கொண்டிருந்த ஒரு பஸ்சில் ஏறினர். அப்போது கணேசனின் நண்பர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்தார். அவரை பார்த்ததும் கணேசன் பஸ்சில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.

தீவிரமாக தேடினர்

இதனால் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தனிப்படை போலீசாருக்கு தப்பி ஓடிய கைதியை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ் மற்றும் போலீஸ்காரர்கள் அருள்மொழிவர்மன், அழகுசுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

செல்போன் சிக்னல் மூலம் மடக்கினர்

அப்போது தஞ்சையை அடுத்த இனாத்துக்கான்பட்டியில் ஒரு முட்புதரில் கணேசன் ஒளிந்து இருந்தது செல்போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.

உடனடியாக இரவு 10.30 மணிக்கு அங்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த கணேசனை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சிக்கு அழைத்துச்சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்