தேனியில் 721 மாணவ, மாணவிகள் 'நீட்' தேர்வு எழுதினர்

தேனியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் 721 மாணவ, மாணவிகள் ‘நீட்' தேர்வு எழுதினர்

Update: 2022-07-17 14:55 GMT

'நீட்' தேர்வு

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடந்தது. இந்த தேர்வுக்காக தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மையம் அமைக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஒரே ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்ட நிலையில், தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 792 மாணவ, மாணவிகள் இந்த மையத்தில் தேர்வு எழுத ஹால்டிக்கெட் பெற்று இருந்தனர். இதற்காக தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

கடுமையான கட்டுப்பாடுகள்

தேர்வு மையத்தின் நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்கு பிறகே மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் மாற்று உடை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டனர். இதனால் பெற்றோர்கள் மாற்று உடை வாங்கி வந்தனர். மாற்று உடைகளை ஆங்காங்கே விவசாய தோட்டங்களில் மறைவான பகுதிகளுக்கு சென்று மாற்றி வந்தனர்

அதுபோல் தலைமுடியை ஜடை பின்னியிருந்த மாணவிகளை பின்னலை அவிழ்த்துவிடுமாறு அறிவுறுத்தினர். துப்பட்டா அணிந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், நுழைவு வாயிலில் துப்பட்டாவை கழட்டி தங்களின் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு மாணவிகள் தேர்வு எழுத சென்றனர்.

மாணவிகள் சுடிதாரில் இருந்த பட்டன்கள், இடுப்பு, முதுகு பகுதியில் ஆடைகளை இறுக்கி கட்டி இருந்த கயறு ஆகியவற்றையும் அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். பெற்றோர்கள் கையால் அறுத்தும், பல்லால் கடித்தும் அவற்றை அகற்றிவிட்டு கலங்கிய கண்களுடன் வழியனுப்பி வைத்தனர். மேலும் காதில் அணிந்து இருந்த தோடு, கழுத்தில் அணிந்து இருந்த சங்கிலி, கயிறு ஆகியவை அகற்றப்பட்டன.

721 பேர் எழுதினர்

ஷூ அணிந்து வந்த மாணவ, மாணவிகள் அதையும் கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றனர். மாணவ, மாணவிகள் பலரும் முக கவசம் அணிந்து வந்தனர். முக கவசம் அணியாமல் வந்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மையத்தில் முக கவசம் வழங்கப்பட்டது. கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்த பின்னர், ஹால்டிக்கெட், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தேனியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வை 721 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 71 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி திரும்பி வரும் வரை பெற்றோர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.

இந்த தேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் என்பது மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். தேர்வு மையத்துக்கு வெளியே தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், உஷா மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்