கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு மற்றும் சுற்றுவட்டாரங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் மக்காச்சோளம், நெல் மற்றும் நவதாணிய பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்த விவசாய நிலங்களுக்குள் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள், மான்கள் புகுந்து பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்தும், பயிர்கள் சேதத்தை தடுக்க காட்டு பன்றிகள், மான்கள் நடமாட்டத்தை ஒழிக்க கோரியும், அவற்றால் ஏற்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும் கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சீனிபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் புவியரசன், மாவட்டத் துணைத் தலைவர் ராமசுப்பு, மாவட்ட குழு உறுப்பினர்கள் துரைராஜ், ஜெயக்குமார், சண்முகையா, மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் கயத்தாறு தாசில்தாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.