மன்னிப்பு கடிதம் கொடுத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-07-12 20:25 GMT

திருப்பரங்குன்றம், 

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை மாநகராட்சி 94-வது வார்டு ஜோசப் நகர் நுழைவு வாயிலில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்ைத தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை புறநகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மதுரை மாவட்ட துணைச் செயலாளர் ஓ.எம்.கே.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நான் வரும் வழியில் சாலைகள் சேதமடைந்து இருப்பதை காண முடிந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் சாலைகளை சீரமைக்கவில்லை. நாங்கள் மக்கள் பணி செய்ய கடமைப்பட்டு இருக்கிறோம், என்றார்.

மன்னிப்பு கடிதம்

இதைதொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருப்பது எதிர்பார்த்ததுதான். அதை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. அ.தி.மு.க.வில் இருந்து விலகிச்சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் தொண்டனாக சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் போன்றவர்கள் போராடி போராடி தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். கட்சியில் யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும், யாரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று பொதுச்செயலாளருக்கு தெரியும். மீண்டும் துரோகம் செய்தால் கண்டிப்பாக பொதுச்செயலாளர் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

தவறை உணர்ந்து...

ஓ.பன்னீர்செல்வம் தன் தவறை உணர்ந்து பொதுச்செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். மக்களுக்கு முரண்பாடாக செயல்படும் தி.மு.க. அரசை வீழ்த்துவதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்