'அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்....' - பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை...!

எடப்பாடி பழனிசாமியில் உருவப்படத்தை பாஜகவினர் தீ வைத்து எரித்த நிகழ்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Update: 2023-03-08 11:08 GMT

சென்னை,

அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.

இந்தசூழ்நிலையில், அண்ணாமலை நேற்று தனது பேட்டியில், பாஜகவினரை இழுத்தால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள்' என்று கூறி அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறினார். பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதற்காக வந்துள்ளேன் என்று கூறினார். அண்ணாமலையின் பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி முறியலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அம்மா (ஜெயலலிதா) எடுக்காத முடிவுகளா? கலைஞர் ஐயா (கருணாநிதி) எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அது போன்று தான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல் வீசினால் உடைய அதிமுக ஒன்றும் கண்ணாடி அல்ல. அதிமுக ஒரு பெரும் சமுத்திரம். அதில் வந்து கல் வீசினால் கல் தான் காணாமல் போகும் ஆனால் சமுத்திரம் பெரிய அளவில் இருந்துகொண்டு தான் இருக்கும். அலைகள் அடித்துக்கொண்டு தான் இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இன்று மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் பலர் விருப்பப்பட்டு சேர்கின்றனர்.

விருப்பப்பட்டு சேரும்போதும் அதை அரசியல் ரீதியில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை. அது அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும்.

திமுகவில் இருந்து ஒரு ஒன்றிய தலைவர் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். அதேபோல் எல்லா கட்சியில் இருந்தும் வருகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை எழுச்சி, வலிமை, பலம்வாய்ந்து, பெரிய அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில் அனைவரும் வந்து சேர்கின்றனர். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பெருந்தன்மையுடன் இருப்பது தான் நல்ல விஷயம்' என்றார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியில் உருவப்படத்தை நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜகவினர் தீ வைத்து எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

இதை அக்கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் கிளர்ந்து எழுந்தால் என்ன ஆவது நிலைமை? இது போன்று செய்யக்கூடாது. இது கண்டனத்திற்குரிய விஷயம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்து அவர்களை பாஜக கட்சியில் இருந்து நீக்குவது தான் நல்ல விஷயம்.

எங்கள் கட்சியில் இருந்து தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் அதற்கு வந்து அவர்களால் (பாஜக) யாராலும் ஈடுகட்டமுடியாது.

அண்ணாமலை எப்படி தலைவரானார் என்ற விஷயத்திற்குள் நான் போக விரும்பவில்லை. அவர் எதை வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால், நான் அம்மா (முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா) போன்று தலைவர் என்று கூறாதீர்கள். அதை சொல்வதற்கு யாருக்கும் இந்தியாவிலும் சரி இனி ஒருவன் பிறக்கப்போவது கிடையாது. அம்மா ( ஜெயலலிதா) போன்ற தலைவர் இனி பிறக்கப்போவது கிடையாது.

செஞ்சிக்கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது. ஒரு கட்சியில் கூட்டணியில் ஒரு சில உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது அந்த கட்சி தலைவரின் பண்பு. தலைவர்களே உணர்ச்சிகளை தூண்டுக்கூடாது.

அந்த வகையில் கூட்டணி தர்மம் அடிப்படையில் பாஜகவை சேர்ந்தவர்கள் அதை உணர்ந்து அந்த அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

கூட்டணியை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியும் கூறிவிட்டார் அண்ணாமலையும் கூறிவிட்டார் 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை' என்றார்.

கடந்த 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக ஆட்சி ஒரு 420 ஆட்சி என்று பாஜகவை சார்ந்தவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் அதற்கு உங்கள் பதில் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்,

தலைவர் அளவில் கருத்து சொல்லும்போது அதற்கு கண்டிப்பாக எதிர்வினையாற்றுவோம். அட்ரெஸ் இல்லாதவர்கள் சொல்லும் கருத்திற்கெல்லாம் நான் விலாசம் கொடுக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அவர்களையெல்லாம் நான் அங்கீகாரம் செய்ய விரும்பவில்லை. அவர்களின் கருத்துக்கு பதில் கருத்து சொல்லவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது' என்றார்.

கடந்த 6-ம் தேதி பாஜகவை சேர்ந்த அமர்பிரசாத் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அமர்பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்