பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update: 2025-01-04 08:09 GMT

சென்னை,

விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4.1.2025) காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (வயது 56) த/பெ. சிவசுப்பிரமணியன், குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 54) த/பெ. கோபால் மற்றும் காமராஜ் (வயது 54) த/பெ. சுப்பு, வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (வயது 54) த/பெ. ராமசாமி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (வயது 46) த/பெ.சக்திவேல், செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 37) த/பெ. ராஜாமணி ஆகிய 6 நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்