04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update: 2025-01-04 04:15 GMT

 

Live Updates
2025-01-04 15:01 GMT

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் சென்னையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து பேசினர். இதன் பின்னர் முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் பற்றி குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தி.மு.க.வினரால் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக முதல்-அமைச்சரோ, அல்லது துணை முதல்-அமைச்சரோ இந்த விவகாரம் தொடர்பாக ஏன் வாயை திறக்கவில்லை. விசாரணை முடிந்த பிறகு யார் அந்த சார்? என்பது தெரிந்துவிடும் என்று கனிமொழி எம்.பி. கூறுகிறார். ஆனால் விசாரணை சரியாக நடக்காது என்றுதான் நாங்கள் பயப்படுகிறோம்.

போராடும் பெண் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், ஆனால் குற்றவாளிகள் நடமாடுவார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. சி.பி.ஐ. விசாரணை வந்தால் மட்டுமே பாரபட்சமான நடவடிக்கைகள் வெளிக்கொணரப்படும். எனவே இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

2025-01-04 13:51 GMT

பட்டாசு ஆலை வெடிவிபத்து; கவர்னர் இரங்கல்

விருதுநகரில் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்து உள்ளார்.

2025-01-04 13:27 GMT

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு; கட்டுக்கட்டாக சிக்கிய ஆவணங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், லேப்டாப்புகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் சிக்கின.

இதேபோன்று, கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கியுள்ளன. முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, இரண்டு அட்டைப்பெட்டிகளில் சிறப்பு புலனாய்வு குழு எடுத்து சென்றுள்ளது.

2025-01-04 13:24 GMT

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று மாலை 4.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி இருந்தது.

2025-01-04 13:18 GMT

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஆண்ட்ரீவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சபலென்கா, ரஷியாவின் போலினா குடெர்மெட்டோவாவை எதிர்த்து விளையாட உள்ளார்.

2025-01-04 13:11 GMT

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் பயங்கர தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

2025-01-04 12:53 GMT

விருதுநகர்:

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவத்தில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சதீஷ்குமார், நிரஞ்சனா தேவி, கணேசன் ஆகிய 3 பேர் மீது வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2025-01-04 12:03 GMT

கர்நாடகாவில் அங்கன்வாடி கட்டிட மேல்சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் காயம்

கர்நாடக மாநிலம் கோலாரில் அங்கன்வாடி கட்டிட மேல்சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். சம்பவத்தின்போது அங்கன்வாடி கட்டிடத்தில் இருந்த 7 குழந்தைகளில், 4 பேருக்கு தலை, கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்