கவர்னர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு
கவர்னர் உரையாற்றாமல் வெளியேறிய நிலையில் அதனை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.;
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும். அந்த வகையில், இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இதற்காக சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிலையில் சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியதை அடுத்து அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கவர்னர் உரையாற்றாமல் வெளியேறிய நிலையில் அதனை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மீனவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்கிறது. தமிழக அரசின் முயற்சியால் 1,106 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் மாநில அரசு பங்களிப்பாக ரூ.1.72 லட்சம் தரப்படுகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 60 சதவீத நிதி பங்களிப்பு தரப்படுகிறது.
வறுமையை ஒழிக்க முதல்வரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பால் உற்பத்தியை அதிகரிக்க லிட்டருக்கு ஊக்கத்தொகை ரூ.3 ஆக உயர்த்தி அரசு வழங்குகிறது. மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின் மாநில பங்கை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.