பொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர் விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 17-ந்தேதியும் விடுமுறை அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், பொங்கல் பண்டிகையை கொண்டாட 6 நாட்கள் தொடர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு, கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜனவரி 17-ந்தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஜனவரி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலான 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25-ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கட்டுமான தொழிலாளர்கள் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அந்த இடிபாட்டில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு தனி மனித தவறே காரணம்: கலெக்டர் பேட்டி
விருதுநகர் அருகே கோட்டையூர் பகுதியில் அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் பற்றி மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அளித்த பேட்டியின்போது, விருதுநகர் அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. வெடி விபத்துக்கு தனி மனித தவறே காரணம். பட்டாசு ஆலை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவால், அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி.க்களை நிறுத்தியது பா.ஜ.க.
டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது. இதில், புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி நிறுத்தி உள்ளது.
இதேபோன்று கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மற்றும் முதல்-மந்திரி அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; ஞானசேகரன் கூட்டாளிக்கு தொடர்பா...? அதிர்ச்சி தகவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஞானசேகரனின் கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் இருக்கிறார் என சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டறிந்து உள்ளனர். அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை; மாணவி தவிர 4 பேர் பாதிப்பு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாணவி தவிர 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் புகாரை பெற சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவின் அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் காலமானார்
மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் இன்று காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரம், இன்று அதிகாலை 3.20 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிறந்த இயற்பியலாளரும் இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவருமான டாக்டர் ராஜகோபால சிதம்பரம் 1975 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.