இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்போம்: அமித் ஷா உறுதி
சத்தீஷ்காரில் இன்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு உள்துறை மந்திரி அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 2026 மார்ச் மாதத்துக்குள் நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்றும், சத்தீஷ்காரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் தியாகம் வீண் போகாது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை கட்டும் திட்டத்தை சீனா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் அறிவியல்பூர்வமாக சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த திட்டத்தால் நதிநீர் பாயும் நாடுகளான இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு எந்தவிதமான எதிர்மறையான தாக்கமும் ஏற்படாது என்றும் கூறி உள்ளது.
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்த தமிழக காவல்துறைக்கு நேரமில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல... தமிழக அரசுக்கு ஆளுநர் கடும் கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:-
இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
திருப்பதிக்கு நடைபயணமாக சென்ற பக்தர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர்.
தமிழக ஆளுநரை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
“தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சத்தீஷ்கார் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.