கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரம்: டிரைவர் கைது

கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் லாரி டிரைவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2025-01-04 03:04 GMT

கோவை,

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 டன் சமையல் கேஸ் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கோவை எப்.சி.ஐ. குடோன் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் அவினாசி மேம்பாலத்தில் ஏறியபோது டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டது.

இதையடுத்து லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன் உடனடியாக சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தார். மேலும் அந்த வழியாக சென்றவர்கள் பீளமேடு தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த சமையல் கேஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவினர், மெக்கானிக் உள்ளிட்டோர் கேஸ் கசிவை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து குளிர்வித்தனர்.

4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காலை 7 மணியளவில் டேங்கரில் இருந்து கேஸ் கசிவதை ஊழியர்கள் தடுத்தனர். ஆனாலும் அந்த பகுதி முழுவதும் கேஸ் மணம் வீசியது. இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் விபத்து நிகழ்ந்த மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் விபத்து நடந்த இடத்தை சுற்றி 1 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள பகுதியில் இருந்த 35 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

கேஸ் கசிவை சரி செய்ததும் கிரேன்களின் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த டேங்கரை தூக்கி மீட்கும் பணி தொடங்கியது. 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காலை 11 மணியளவில் கேஸ் டேங்கர் பத்திரமாக தூக்கி நிறுத்தப்பட்டது. கேஸ் கசிந்த நேரத்தில் அந்த பகுதியில் தீப்பொறி, செல்போன் கதிர்வீச்சு பட்டாலோ டேங்கர் வெடித்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து ஏற்படாததால் அதிகாரிகள், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் லாரி டிரைவரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து லாரி டிரைவர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரைவர் ராதாகிருஷ்ணனை நேற்று நள்ளிரவில் கைது செய்த போக்குவரத்து போலீசார், அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்