பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.
பாலியல் குற்றங்கள்
வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டு கொண்டே செல்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி, கல்லூரிகளில்
சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
விழிப்புணர்வு அவசியம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் செல்லதுரை:- பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கு மாணவிகளிடையே விழிப்புணர்வு மிகவும் அவசியம். அந்த வகையில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த விழிப்புணர்வுகளை அதிகப்படுத்த வேண்டும். மாணவிகளுக்கு மனரீதியில் தைரியம் கொடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும். பாலியல் சீண்டல்கள் ஏற்படும் போது உடனடியாக எந்த தயக்கமும் இன்றி பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது போலீசிடமோ தெரியப்படுத்த வேண்டும்.
ஆடை கட்டுப்பாடுகள்
புதுக்கோட்டையை சேர்ந்த உடற்கல்வி பேராசிரியை மேகலா:- பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் நல்ல முறையில் நட்புடன் பழகி கொள்ள வேண்டும். வீட்டிலும் பெற்றோர் தங்களது மகன், மகள்களிடம் பள்ளி, கல்லூரி பழக்க வழக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தேவையான அறிவுரைகளை கூறி அளவோடு பழக்கம் வைத்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். எதுவும் ஒருவருடைய பார்வைகளை பொறுத்து அமைகிறது. அந்த பார்வையானது ஆசிரியர், மாணவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. பொதுவாக தற்போது தேவையான அளவுக்கு மட்டுமே செல்போன்களை பயன்படுத்த வேண்டும். செல்போன் பயன்பாடுகளை குறைத்தால் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. ஆடை கட்டுப்பாடுகள் அத்தியாவசியமானது. மாணவிகளுக்கு நாகரீகம் என்ற பெயரில் கட்டுப்பாடு இல்லாத ஆடைகளை அணிந்து கொள்ள பெற்றோர் அனுமதிக்க கூடாது. பள்ளி, கல்லூரிகளில் அனைவருக்கும் ஆடை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.
பாலியல் கல்வி அவசியம்
புதுக்கோட்டையை சேர்ந்த வக்கீல் சங்கீதா:- முதலில் பாலியல் குற்றங்கள் என்றால் என்ன என்பதை பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு புரிய வைக்க வேண்டும். நிறைய மாணவிகளுக்கு தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி தெரிவதில்லை. அவ்வாறு தெரிந்தாலும் அதை வெளியில் சொல்லத் தயங்கிக் கொண்டு வெளியுலகுக்கு காட்டுவதில்லை. இது முதல் தவறு. எனவே மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடனும், வகுப்பு ஆசிரியைகளுடனும் இதுபற்றி மனம் திறந்த பேசக்கூடிய இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாலியல் கல்வி அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும். பாலியல் அத்து மீறலுக்கான கடுமையான தண்டனை தரக்கூடிய போக்சோ போன்ற சட்டங்கள் வலிமையாக உள்ளன என்பதை மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் இருபாலருக்கும் தெளிவாக விளக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாலியல் அத்துமீறல்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது அச்சமின்றி புகார் தர முன்வர வேண்டுமென மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், சக மாணவர்கள், அண்டை வீட்டார் போன்றோரின் எவ்வித ஆசை வார்த்தைகளுக்கும், மிரட்டல்களுக்கும் மாணவிகள் பலியாகிவிடக்கூடாத அளவில் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் ஏற்படுத்த வேண்டும். தாங்கள் பாலியல் ரீதியாக அத்துமீறலுக்கு உள்ளானது வெளியில் தெரிந்தால் அவமானம், பிரச்சினைகள் என்று மாணவிகள் ஒருபோதும் கருதக்கூடாது. பெண் குழந்தைகளிடம் பெற்றோர் மற்றும் ஆசிரியைகள் மனம் விட்டுப்பேச வேண்டும். உடல் மற்றும் மன ரீதியாக அவர்களுக்கு மாற்றங்கள் ஏற்படின் அதனை தீவிரமாக கண்காணித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவிக்கும் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். பாலியல் அத்துமீறலில் யார் ஈடுபட்டாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பமுடியாது என்ற பயத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் அளவுக்கு இன்னும் கூடுதல் விழிப்புணர்வுகளை அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகள் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
உளவியல் ஆலோசனை
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வசந்த மல்லிகா:- இன்றைய நாட்களில் பாலியல் வன்முறைகள் நடப்பது பெருகி வருவதை நாள்தோறும் ஊடகத்தில் வரும் செய்திகள் மூலமாக அறிந்து கொள்கிறோம். அதுவும் பள்ளி, கல்லூரிகளில் இத்தகைய நிகழ்வுகள் நேரிடுவது மிகவும் வேதனைக்குரியதாகும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்- மாணவிகள் இடையே தோழமை உணர்வை ஏற்படுத்தும் வகையில் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மேலும் பெரும்பாலான பெண்கள் தமக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும் போது வெளியில் சொன்னால் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற அச்சத்தில் அதை சொல்ல தயக்கம் காட்டுகின்றனர். இன்னும் சிலர் அறியாமை காரணமாகக்கூட இத்தகைய செயல்களுக்கு தாமாகவே பலியாகும் நிகழ்வுகளும் நடக்கின்றன. எனவே ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் உளவியல் வல்லுனர்களைக் கொண்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இந்த உளவியல் ஆலோசனையானது பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் பாலியல் தொடர்பான வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கும் மிக அவசியமான ஒன்று. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு பள்ளி, கல்லூரி நிர்வாகமும் தமது நிறுவனத்தில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படும் விதத்தில் நடந்து கொள்வது மிக மிக முக்கியமான ஒன்றாகும். தம்முடன் பணியாற்றும் பெண் பணியாளர்கள் மற்றும் தன்னிடம் பயிலும் மாணவிகள் அனைவரும் தமது குடும்பத்தில் உள்ள பெண்களை போன்றவர்கள் என்ற ஆத்மார்த்தமான உணர்வுடன் செயல்பட்டாலே இத்தகைய வன்முறைகள் நடப்பதை தவிர்க்க முடியும்.
பாலின வேறுபாடு
புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மனநல டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்:- பொதுவாக பெண்கள் பருவ வயது எட்டும் வரை பாலின வேறுபாடு தெரியாது. பருவமடைந்தபின் அவர்களின் கட்டுப்பாடுகள் வேறுபடுகிறது. பருவ வயதில் வரம்புமீறி செயல்படுவதை தடுக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்போனை தனியாக பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு பாலியல் குற்றம் ஏற்படுவதாக தெரிந்தால் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல் காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். ஒருவர் தவறான நடத்தையில் பழகுவதாக தெரிந்தால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.
போக்சோ சட்டம்
பொன்னமராவதியை சேர்ந்த பெற்றோர் கணேசமூர்த்தி:- பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவர்களுக்கு பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் போக்சோ சட்டம் குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பாலியல் குற்றங்களை முழுமையாக தடுக்க முடியும். எனவே ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை 2 மணி நேரம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
மேப்பூதகுடியை சேர்ந்த பொன்னுச்சாமி:- இளம்பெண்கள், சிறுமிகள், மாணவிகளுக்கு தற்போது பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க முதலில் பெற்றோர்களாகிய நாம் சபதம் எடுக்க வேண்டும். பணம் என்பது வாழ்க்கையின் ஒருபகுதியாக இருந்தாலும் அது நம் வருங்கால சந்ததியை பாதிக்கும் வண்ணம் இருக்கக்கூடாது. எனவே சமுதாயத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை குழந்தைகளிடம் பொறுமையாக எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அவர்களுக்காக பெற்றோர்களாகிய நாம் நேரம் ஒதுக்கினால் மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதுமட்டுமின்றி அனைத்து பள்ளிகளிலும் பாலியல் தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும். மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்சினைகளை களைய உளவியல் ஆலோசகர், உதவியாளர்களுடன் கூடிய ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு முதலில் ஆலோசனை வழங்க வேண்டும். அதற்கு காரணம் வேலியே புல்லை மேய்ந்த கதையாக ஆசிரியர்களே மாணவ, மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவங்களை நாம் ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிகிறது. எனவே பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தை திருமணம்
அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த கேசவன்:-
பாலியல் தொடர்பான விழிப்புணர்வுகளை 10 வயது முதலே குழந்தைகளுக்கு பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல் ரீதியான பிரச்சினைகள், சட்ட ரீதியான பிரச்சினைகளை மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு குறித்து வாரத்திற்கு ஒரு நாளாவது நடத்த வேண்டும். ஆண், பெண் இருவரும் எந்த வயதில் திருமணம் செய்து கொண்டால் அது சட்ட ரீதியான திருமணமாக அங்கீகரிக்கப்படும் என்பதையும் இளம் வயதிலேயே மாணவ- மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பல்வேறு இடங்களில் நடைபெறும் பாலியல் தொடர்பான குற்றங்கள் பற்றியும், அதற்காக நீதிமன்றம் கொடுத்துள்ள தண்டனைகள் பற்றியும் எடுத்துக் கூற வேண்டும். யாரேனும் பாலியல் தொல்லை கொடுத்தால் பெற்றோரிடமோ அல்லது 1098 போன்ற இலவச தொலைபேசியில் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதை மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக் கூறினால் நிச்சயம் பாலியல் தொடர்பான குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.