ஓசூர் காலிபிளவர் விலை கடும் உயர்வு

ராமநாதபுரத்தில் ஓசூர் காலிபிளவர் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.;

Update:2023-06-16 00:15 IST

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாள்தோறும் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் வந்து விற்பனையாகி வருகின்றன. இதுதவிர ராமநாதபுரத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் சந்தை அன்று உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட காய்கறிகள் கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற சந்தையின்போது காய்கறிகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

ராமநாதபுரம் சந்தையில் ஓசூர் பகுதியில் இருந்து மினிசரக்கு வாகனங்களில் ஏராளமான காலிபிளவர்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன. சிறிய பூ ரூ.35 வரையும், பெரிய பூ ரூ.40 முதல் 50 வரையும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.10 என கூவி கூவி விற்பனை செய்யப்பட்ட காலிபிளவர் நேற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது பொதுமக்களை அதிர்ச்சி அடையச்செய்தது.

இதுகுறித்து காலிபிளவர் விற்பனையாளர் ஒருவர் கூறும் போது:- ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காலிபிளவர் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். மழையின்றி பூக்கள் உற்பத்தி குறைந்துவிட்டது. கடும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் காலிபிளவர்களின் உற்பத்தி குறைந்து அதன் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கடந்த மாதம் வரை ரூ.10 முதல் 20 வரை விற்பனையான காலிபிளவர் தற்போது ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்