வீடு புகுந்து பட்டறை தொழிலாளி குத்திக்கொலை
மனைவியுடன் பேசியதை கண்டித்ததால் வீடு புகுந்து பட்டறை தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மனைவியுடன் பேசியதை கண்டித்ததால் வீடு புகுந்து பட்டறை தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி கொலை
மதுரை காமராஜர்புரம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 40). இவர் அங்குள்ள சில்வர் பட்டறையில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு 34 வயதில் மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ்குமார் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. உடனே ராஜேஷ்குமார் எழுந்து கதவை திறந்த போது 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேர் அவரை பிடித்து கொள்ள ஒருவர் மட்டும் கத்தியால் ராஜேஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷ்குமாரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
மனைவியுடன் பேசியதை கண்டித்தார்
இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் மருதுசூரியா(30). அரசு ஆஸ்பத்திரியில் தினக்கூலி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அப்போது காமராஜர்புரம் பகுதிக்கு வந்த போது ராஜேஷ்குமாரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் கொரோனா பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், தினமும் 500 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று கூறி அவரது செல்போன் நம்பரை கொடுத்து விட்டு சென்றார்.
அதை தொடர்ந்து ராஜேஷ்குமாரின் மனைவி அந்த வேலைக்கு சென்றதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த ராஜேஷ்குமார் தனது மனைவியை கண்டித்து உள்ளார். இதை தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. ஆனால் மருதுசூரியாவிடம் அவரது மனைவி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். கடந்த வாரம் இருவரும் செல்போனில் பேசும் போது, ராஜேஷ்குமார் மனைவியின் செல்போனை பிடுங்கி அவரை சத்தம் போட்டுள்ளார். மேலும் போலீசில் புகார் கொடுப்பதாகவும் அவரை மிரட்டியுள்ளார்.
3 பேர் கைது
தனது கள்ளக்காதல் விவகாரத்திற்கு ராஜேஷ்குமார் தடங்கலாக இருப்பதும், அவர் தன்னை திட்டியதும் அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே நேற்று முன்தினம் இரவு தன்னை ஒருவர் தாக்கி விட்டதாக மருதுசூரியா தனது நண்பர்கள் வண்டியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஸ் என்ற தக்காளி சதீஸ் (28), தெப்பக்குளம் சி.எம்.ஆர்.ரோட்டை சேர்ந்த பழம் வியாபாரி சந்தோஷ் (24) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து இரவு முழுவதும் மது அருந்தி உள்ளனர்.
மது போதையில் அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ராஜேஷ்குமார் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரை கத்தியால் குத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் வண்டியூர் பகுதியில் மறைந்திருந்த கள்ளக்காதலன் மருதுசூரியா, சதீஸ், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.