நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் ஆய்வு

சேலத்தில் அம்பேத்கர் சிலை இடமாற்றம் செய்வது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

Update: 2022-06-30 20:28 GMT

சேலம்:

சேலத்தில் அம்பேத்கர் சிலை இடமாற்றம் செய்வது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அம்பேத்கர் சிலை மாற்றம்

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.216 கோடியில் செரி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலம் தொங்கும் பூங்கா அருகே அம்பேத்கர் சிலையில் இருந்து தொடங்கி சுகவனேசுவரர் கோவில் பகுதியில் நிறைவடைகிறது. இந்த மேம்பாலம் பணிக்காக அம்பேத்கர் சிலையை சிறிது தூரம் தள்ளி மாற்றி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது, சுந்தர் லாட்ஜ் பஸ் நிறுத்தம் அருகே புதிதாக ரவுண்டானா அமைத்து அதில் அம்பேத்கர் சிலையை வைப்பது என்று மாநகராட்சி நிர்வாகமும், போலீசாரும் முடிவு செய்துள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில், அம்பேத்கர் சிலை இடமாற்றம் செய்வது தொடர்பாகவும், அங்கு ரவுண்டானா அமைக்கப்பட்டு வருவது குறித்தும் நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) உதவி கோட்ட பொறியாளர் தேசய்யா, உதவி பொறியாளர் சிவசண்முகவேல், போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமார் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ரவுண்டானா அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், செரி ரோட்டில் 90 சதவீதம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. அம்பேத்கர் சிலையை மாற்றி வைக்கும் பட்சத்தில் பணிகள் விரைவில் முடிவடையும். அதன்பிறகு ரெயில்வே மேம்பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு பிரட்ஸ் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்