மதுபானங்கள் கொள்முதல் தொடர்பான விவரங்களை தெரிவிக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட செலவுகள், மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எந்த விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன உள்ளிட்ட விவரங்களை கேட்டு கடந்த 2015-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டன்கீழ் விண்ணப்பித்திருந்தார்.
இதில் மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் வழங்கிய நிலையில், மூன்றாம் நபருடைய வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எந்த விலைக்கு மதுபானம் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது தொடர்பான விவரங்களை வெளியிட மறுப்பு தெரிவித்தது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் லோகநாதன் மீண்டும் 2017-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பதற்கான காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்றும், மதுபான கொள்முதல் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான விவரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விவரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு 10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அந்த தொகையை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி, மது உற்பத்தி நிறுவனங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் நகல்களையும் சீல் வைக்கப்பட்ட கவரில் ஜனவரி 6-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.