தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

Update: 2022-12-25 18:45 GMT

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும்.

இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதேபோன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பலத்த மழை

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பனிப்பொழிவு காணப்பட்டது. இந்த பனிப்பொழிவு நேற்று காலை வரை நீடித்தது.

மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. லேசான சாரல் மழை பெய்தது. மாலை 4.45 மணிக்கு பிறகு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி ஊர்ந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்