கொட்டித்தீர்த்த கனமழை

கிருஷ்ணகிரியில் நேற்று மதியம் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடானது.

Update: 2022-10-09 18:45 GMT

கிருஷ்ணகிரியில் நேற்று மதியம் பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடானது.

கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1½ மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.

இந்த கனமழையால் கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக கிருஷ்ணகி 5 ரோடு ரவுண்டானா, பெங்களூரு சாலையில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

போச்சம்பள்ளி

இதேபோன்று போச்சம்பள்ளியில் கனமழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் நேற்று கூடிய வாரச்சந்தையில் காய்கறி வியாபாரிகள், தானிய வியாபாரிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், ஆடு மாடு மற்றும் கோழிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் செய்வது அறியாது திகைத்தனர்.

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் கிருஷ்ணகிரி நகரிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் இரவு குளிர்ந்த காற்று வீசியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பாரூர்-7.40, நெடுங்கல்-5.20, கிருஷ்ணகிரி-1.80, ஊத்தங்கரை 1.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்