தர்மபுரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை

Update: 2023-08-10 19:45 GMT

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. மேலும் தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆறு போல் ஓடியது.

இதன் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இலக்கியம்பட்டி பகுதியில் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்தநிலையில் நேற்று பகலில் வெயில் வழக்கத்தை விட குறைந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இந்த மழையால் விவசாய நிலங்கள் மற்றும் ஏரிகள், குட்டைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாய சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 26 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தர்மபுரி-20, அரூர்-17, பாப்பிரெட்டிப்பட்டி- 8, மொரப்பூர்- 10, நல்லம்பள்ளி- 13. மாவட்டம் முழுவதும் சராசரியாக 11.02 மி.மீ.மழை பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்