காலம் தாழ்த்தாமல் போக்குவரத்து தொழிலாளர்களின் குறைகளை களைய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதை சற்றும் அனுமதிக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-06 17:08 GMT

கோப்புப்படம்

சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளில் காலம் தாழ்த்தி பிரச்சினையைத் தள்ளிப் போடுவதை விட்டு விட்டு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் குறைகளை களைய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் நிரப்பப்படாமல் இருக்கும் 35 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களை மீட்டெடுக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் பெரிதும் அரசுப் பஸ்களை நம்பி இருக்கும் சூழலில், தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு, பொதுமக்களை மேலும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக்கும். ஆனால், தி.மு.க. அரசுக்கு தொழிலாளர்கள் பற்றியும் கவலை இல்லை, பொதுமக்கள் பற்றியும் அக்கறை இல்லை.

தி.மு.க. அரசின் திறமையின்மையால் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதை சற்றும் அனுமதிக்க முடியாது. தொழிலாளர் நலன்களைப் புறக்கணிக்கும் அமைச்சரின் முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

8-ந்தேதி (நாளை) அன்று. தி.மு.க. அரசு, மீண்டும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. காலம் தாழ்த்தி பிரச்சினையைத் தள்ளிப் போடும் யுக்தியாக இல்லாமல், பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் குறைகளைக் களைய, அமைச்சரும் தி.மு.க. அரசும் முன்வர வேண்டும்.

பொங்கல் பண்டிகை காலத்தில் போக்குவரத்து வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜனதா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்