பசுந்தாள் உரங்கள் அதிக விளைச்சல் கொடுக்கும்-வேளாண்மை அலுவலர் தகவல்

பசுந்தாள் உரங்கள் அதிக விளைச்சல் கொடுக்கும்-வேளாண்மை அலுவலர் தகவல்

Update: 2023-08-03 18:55 GMT

பசுந்தாள் உரங்களை வயலில் இட்டு உழுவதால் அதிக விளைச்சலை பெறலாம் என்று மண்பரிசோதனை வேளாண்மை அலுவலர் தெரிவித்தார்.

பசுந்தாள் உரங்கள்

சிவகங்கை மண் பரிசோதனை வேளாண்மை அலுவலர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- பயிர் வளர்ச்சிக்கு மண்ணில் உள்ள சத்துக்களின் நிலையை அறிந்து உரமிட வேண்டும். நல்ல மண் விவசாயத்திற்கு தேவையான முதன்மையான காரணி. மண்ணில் அதிக அளவு கரிமச்சத்து இருப்பின் பயிர் விளைச்சல் அதிகமாகி மகசூல், வருமானம் அதிகரிக்கும். மண்ணில் உள்ள கார்பன் எனப்படும் கருமச்சத்தினை அதிகரிக்க தொழுஉரம் இடவேண்டும்.

பசுந்தாள் உரம் எனப்படும் சணப்பை, தக்கைப் பூண்டு, கொளுஞ்சி போன்றவற்றை விதைத்து அவை பூக்கும் தருவாயில் நன்கு மடக்கி ஈரப்புழுதியாக உழுது விட வேண்டும். பசுந்தளை உரம் எனப்படும் வேம்பு, புங்கன், எருக்கு போன்றவற்றை சிறு, சிறு கிளைகளாக வெட்டி வயலில் இட்டு ஈரப்புழுதியில் மடக்கி உழுதுவிடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அவை நன்கு மக்கி மண்ணில் கரைந்து கரிமச்சத்தாக மாறி மண்ணில் உள்ள சத்துக்களுடன் கலந்து நல்ல விளைச்சலை கொடுக்கும்.

அசோஸ்பைரில்லம்

ரைசோபியம் எனப்படும் பாக்டீரியாவானது காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது. பயறுவகை பயிர்கள், சணப்பை போன்ற பயிர்களின் வேர் முடிச்சுகளில் இத்தகைய பாக்டீரியாக்கள் உள்ளதால் இயல்பாகவே உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு போன்ற பயருகளை பயிரிடுவதன் மூலம் மண்ணில் உள்ள தழைச்சத்தினை அதிகரிக்க முடியும். அதே போன்று அசோஸ்பைரில்லம் எனப்படும் பாக்டீரியாவானது மண்ணில் உள்ள தழைச்சத்தினையும் பாஸ்போபேக்டீரியாவானது மண்ணில் உள்ள மணிச்சத்தினையும் கரைத்து பயிருக்கு கிடைக்க செய்கின்றன. இவை உயிர்உர பொட்டலங்களாகவும், திரவ வடிவிலும் கிடைக்கின்றன. மேற்கண்ட உயிர் உரங்களை பொடியாகவோ, திரவ வடிவிலோ இடுவதன் மூலம் மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகளை அதிகரிக்கலாம். இவை மண்ணின் அமில, கார நிலையை சமன்படுத்துவதால் மற்ற சத்துக்களும் பயிருக்கு எளிதில் கிடைக்கும். மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்களின் நிலையை அறிந்து கொள்வதுடன் அதற்கு ஏற்றவாறு யூரியா, சூப்பர் பாஸ்பேட், மூரேட் ஆப் பொட்டாஷ், கலப்பு உரங்கள், நுண்ணூட்ட உரக்கலவை உரங்களை இடுவதால் மண்ணில் உள்ள சத்துக்களின் நிலையை அதிகரித்து விளைச்சலையும் வருமானத்தையும் அதிகரிக்க முடியும். மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களின் தேவைக்கு ஏற்ப உரமிடுவதால் மண்வளமும் பாதுகாக்கப்படுவதுடன் உர செலவு குறைந்து விவசாயத்தில் அதிக வருமானம் ஈட்டலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்