தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கவர்னர் இழிவுபடுத்தக்கூடாது - கே.எஸ்.அழகிரி

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கவர்னர் இழிவுபடுத்தக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-26 09:00 GMT

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

டெல்லியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், வழக்கம்போல் வகுப்புவாத விஷத்தை கக்கி தன்னை தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. காட்டியிருக்கிறார்.

திருக்குறளில் ஜி.யு. போப் அளித்த மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக போகிற போக்கில் பொய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அதோடு, அனைத்துக்கும் பொதுவான ஆதிபகவன் என்ற வார்த்தையையும் தவிர்த்துள்ளதாக கூறியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டு எவ்வளவு பொய் என்பதை, ஆரம்பப்பள்ளியில் படிக்கும் நம் குழந்தைகளை கேட்டாலே புரியும்.

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தபட்சம் இழிவுபடுத்தாமல் இருக்கவேண்டும். அப்படி இழிவுபடுத்துகிற பணியை தமிழக கவர்னர் தொடருவாரேயானால், தமிழ் மக்களின் கடும் சீற்றத்துக்கு அவர் ஆளாகநேரிடும்.

தமிழர்கள் எதையும் சகித்துக்கொள்வார்கள். ஆனால், தமிழர்களுடைய பண்பாடு, நாகரிகம், கலாசாரம் ஆகியவற்றை இழித்து பேசுகிறவர் தமிழக கவர்னராகவோ அல்லது வேறு எவராகவோ இருந்தாலும் தமிழ் மக்கள் பொங்கி எழுவார்கள்.

எனவே, தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த அறிஞர் பெருமக்களை கொச்சைப்படுத்துகிற கவர்னர் ஆர்.என். ரவியை தமிழக மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய போக்கை அவர் தொடருவாரேயானால் தமிழக கவர்னர் பொறுப்பிலிருந்து அவர் விலகவேண்டிய நிலை உருவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்