பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

தேடுதல் குழுவில் கூடுதலாக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-09-06 16:48 GMT

சென்னை,

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாடு கவர்னர் இருந்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு மாநில அரசு சார்பில் நியமிக்கப்பட்டு, அந்த தேடுதல் குழு பரிந்துரைக்கும் 3 பேரில் தகுதியானவர்களை தான் கவர்னர் தேர்வு செய்கிறார்.

துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு அமைக்கப்படும் இந்த தேடுதல் குழுவில், வேந்தர் சார்பில் ஒருவரும், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் ஒருவரும், கல்வி கவுன்சில் சார்பில் ஒருவரும் என மொத்தம் 3 பேர் இடம் பெறுவார்கள்.

இதில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) உறுப்பினர் இடம்பெற வேண்டும் என்று பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் இதனை ஏற்க மாநில அரசு மறுப்பு தெரிவித்தது. இதனால் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேடுதல் குழுவில் வழக்கமாக 3 உறுப்பினர்கள் இடம்பெறும் நிலையில், இந்த முறை 4 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்