சங்கராபுரம் அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி
சங்கராபுரம் அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;
சங்கராபுரம்,
கியாஸ் கசிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடையை மனைவி காயத்ரி (வயது 25). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். ஏழுமலை சவுதி அரேபியாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். காயத்ரி தனது மகனுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு காயத்ரி பக்கத்து வீட்டை சேர்ந்த ஆராயி மற்றும் அவரது மகன் முருகன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆராயி வீட்டில் உள்ள சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து நாற்றம் வீசியது. இதை உணர்ந்த காயத்ரி உள்ளே சென்று செல்போன் டார்ச்சை இயக்கி சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளதா என பார்த்ததுடன், ரெகுலேட்டரை ஆப் செய்தார்.
சிலிண்டர் வெடித்துச் சிதறியது
அந்த சமயத்தில் திடீரென சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் காயத்ரி பலத்த தீக்காயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
இந்த தீவிபத்தை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்ததுடன், வலியால் அலறிய காயத்ரியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெண் சாவு
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காயத்ரி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காதர்ஷெரீப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பக்கத்து வீட்டில் ஏற்பட்ட கியாஸ் கசிவை பார்க்க சென்ற பெண் சிலிண்டர் வெடித்து பலியான சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.