ஊத்தங்கரையில் சதுர்த்தி விழாவுக்கு தயாரான விநாயகர் சிலைகள்

ஊத்தங்கரையில் சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன. கடந்த ஆண்டை விட விற்பனை மும்முரமாக நடக்கிறது.

Update: 2023-09-08 19:30 GMT

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரையில் சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன. கடந்த ஆண்டை விட விற்பனை மும்முரமாக நடக்கிறது.

சதுர்த்தி விழா

ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) சதுர்த்தி விழாவை மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

ஊத்தங்கரை திருப்பத்தூர் சாலையில் அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் வண்ண வண்ண நிறங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, அனுமான், பிள்ளையார்பட்டி கருப்பு, ஜல்லிக்கட்டு காளை, திரிசூலம், சிங்கவால், யானைப்போல் ரதம், மயில்வாகனம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வகையான விநாயகர் சிலைகள் இங்கு உள்ளன. இங்குள்ள விநாயகர் சிலைகளை தர்மபுரி, திருப்பத்தூர், அரூர், திருவண்ணாமலை, குப்பம், போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

கிழங்கு மாவில்...

இதுகுறித்து சிற்பி முத்து கூறுகையில், ஊத்தங்கரை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். எங்களிடம் தயாரிக்கப்படும் இந்த விநாயகர் சிலைகள், முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம் கிழங்கு மாவுகளிலும், அட்டைகள் மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

இதனை ஆறு, ஏரியில் கரைக்கும் பொழுது மீன்களுக்கு உணவாக இது மாறுகின்றன, அந்த உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் இந்த சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மழை காரணமாக சிறிது மந்தமான நிலையில் வியாபாரம் நடந்தாலும், இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் விற்பனை தற்போது மும்முரமாக நடந்து வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்